English
தமிழ்
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
உன்னதமான தெய்வீகத்தின் கருவறை
கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் சுவாமி ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒரு குன்றின் உச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் மலைகளாலும் பெரியார் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள அடர்த்தியான வனங்களாலும் சூழப்பட்டுள்ளது. இது உலகின் மிகப் பெரிய வருடாந்திர புனிதப் பயணத் தலங்களில் ஒன்றாகும், ஒவ்வோர் ஆண்டும் 10 – 15 மில்லியன் புனிதப் பயணிகள் இக் கோயிலுக்கு வருகை புரிவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் 3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தப் புனிதமான குன்றின் உச்சி சாதி, இனம் மற்றும் சமய வேறுபாடுகளைக் கடந்து ஆன்மீக ரீதியாக ஆறுதல் தேடும் அனைவரையும் வரவேற்கும் இடமாக விளங்குவதே சபரிமலையின் தனித்துவம் ஆகும்.
சபரிமலையில் கடவுள் ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரியாக, “நித்திய பிரம்மச்சாரி நிலையில்” வணங்கப்படுகிறார்.
ஐயப்பன் கோயிலில் நான்கு பொன் குவிமாடங்களுடன் கூடிய தங்க முலாம் பூசப்பட்ட கூரையைக் கொண்ட கருவறையைக் கொண்டுள்ளது. அது இரண்டு மண்டபங்கள் மற்றும் ஒரு பலிகல்புராவால் சூழப்பட்டுள்ளது. கோயிலின் பிரதானப் படிக்கட்டு பஞ்சலோகத்தால் மூடப்பட்ட 18 புனிதப் படிகளைக் கொண்டுள்ளது. ஒரு பக்தர் இந்தப் படிக்கட்டுகள் வழியே ஏற வேண்டும் என்றால் அவர் கடவுளுக்கு அளிக்க புனிதமான இரண்டு பகுதிகள் கொண்ட படையலாகிய இருமுடி கட்டி எடுத்து வந்திருக்க வேண்டும்.
சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் பற்றிப் பண்டைய காலத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. ஆயினும், 12-ஆம் நூற்றாண்டில் பந்தளம் வம்சத்தின் கல்வெட்டுகளில் இடைக்காலத்தின் பிற்பகுதியில் கோயில் பற்றிய சில குறிப்புகளை வரலாற்று ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கோயில் 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு முக்கியமான புனிதப் பயண மையமாகப் பிரபலமடைந்தது.
சபரிமலை கோயில் கேரளாவில் உள்ள தன்னாட்சி அமைப்பாகிய திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகின்ற முக்கியக் கோயில் ஆகும், இது இம் மாநிலத்தில் உள்ள 1200-க்கும் மேற்பட்ட கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிடுகின்றது.