புனிதக் கோயிலுக்கு ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு ஐயப்ப பக்தரின் கனவு ஆகும். சன்னிதானம் செல்ல மூன்று வெவ்வேறு பாதைகள் உள்ளன. பத்தனம்திட்டா சாலை வழியாக சாலக்கயம், நிலக்கல் சென்று அங்கிருந்து பம்பை செல்வது எளிதான வழியாகும். பக்தர்களை நீலிமலைக்கு அழைத்துச் செல்லும் பாதையும் இது தான். சாலக்கயம் பம்பையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பக்தர்கள் புனித நதியில் நீராடிய பிறகு நீலிமலை ஏறுகின்றனர்.

பம்பை

இந்த நதி நீலிமலை அடிவாரத்தில் பாய்வதால் அது சுவாமி ஐயப்பனின் பாதம் தொட்டு வணங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். மலை மேல் ஏறத் தொடங்குவதற்கு முன் இந்தப் புனித நதியில் நீராடுவது அவசியம் எனக் கருதப்படுகின்றது. இதில் ஓடும் நீர் தற்போதைய பிறவியிலும் முற்பிறவியிலும் நாம் சேர்த்து வைத்துள்ள பாவங்கள் அனைத்தையும் கழுவி, நமக்கு முக்தி அளிக்கும் என்பது நம்பிக்கை.

நீலிமலை

நீலிமலை மீது ஏறுவதற்கு முன், பக்தர்கள் முதலில் பம்பை கணபதி கோயிலில் வழிபாடு நடத்துகின்றனர்.

இதைத் தொடர்ந்து, பந்தளம் மன்னரின் பிரதிநிதியிடம் ஆசி பெற்று திருநீறு வாங்குகின்றனர். சிறிது தூரத்திற்கு சமதளப் பாதையில் சென்ற பிறகு செங்குத்தான மலைப்பாதை தொடங்குகிறது. இந்தப் பயணம் பூங்காவனம் அல்லது புனிதத் தோப்பு வழியாகச் செல்கிறது. மாதங்க முனிவரின் சிஷ்யை, தீவிர ராம பக்தையான நீலியின் நினைவாக இதற்கு நீலிமலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. நீலிமலையின் செங்குத்தான கிரானைட் படிக்கட்டுகளைக் கண்டு பயப்படுபவர்கள், வழக்கமாக சுவாமி ஐயப்பன் சாலை – சந்திரானந்தன் சாலை வழியாக சன்னிதானம் செல்கின்றனர்.

அப்பாச்சிமேடு

நீலிமலைப் பாதையில் செங்குத்தாக ஏறிய பிறகு, பக்தர்கள் அப்பாச்சிமேட்டை அடைகின்றனர். சுவாமி ஐயப்பனின் சீடர்களில் ஒருவரான கதுரவன் தீய சக்திகளைக் கட்டுக்குள் வைத்து அந்த இடத்தைப் பக்தர்களுக்குப் பாதுகாப்பான இடமாக ஆக்குவதாக அவர்கள் நம்புகின்றனர். பாதையின் இரண்டு பக்கங்களிலும் உள்ள ஆழமான பள்ளத்தாக்குகள் அப்பாச்சி மற்றும் எப்பாச்சி என அழைக்கப்படுகின்றன. தீய சக்திகளைச் சாந்தப்படுத்த பக்தர்கள் சாத உருண்டைகளைப் பள்ளத்தாக்குகளுக்குள் வீசுகின்றனர். 

சபரிபீடம்

அப்பாச்சிமேடு பகுதிக்கு அடுத்து வருவது சபரிபீடம் ஆகும். ராமாயணத்தில் வரும் பெண் துறவியான சபரியின் ஆசிரமம் இருந்த இடம் இது எனப் பொதுவாக நம்பப்படுகின்றது. இங்கு தான் ராமபிரான் சபரிக்கு முக்தி அளித்ததாக நம்பப்படுகின்றது. பக்தர்கள் சன்னிதானத்திற்குச் செல்வதற்கு முன், இறைவனுக்குக் காணிக்கையாக இங்கு தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபடுகின்றனர்.

சரம்குத்தி

சரம்குத்தி, சபரிபீடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கன்னிசாமிகள் சரம்குத்தியில் ஆலமரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள சுவரில் அம்பு எய்கின்றனர். சபரிமலையின் கருவறை மூடப்படுவதற்கு முன், மாளிகைப்புரத்தில் இருந்து சரம்குத்தி வரை ஊர்கோலம் நடத்தப்படுகின்றது. சரம்குத்தியில் இருந்து பதினெட்டாம்படி அடிவாரம் வரை மேற்கூரையுடன் கூடிய பாதை உள்ளது.

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top