English
தமிழ்
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
அடர்ந்த பசுமைக்கு மத்தியில் ஒரு தெய்வீகப் பயணம்
எருமேலி பாதை
எருமேலி பாதையில் சென்று கரிமலை மலையில் ஏறி அடர்ந்த வனப்பகுதி வழியாக சன்னிதானத்தைச் சென்றடைவது என்பது ஐயப்ப பக்தர்களின் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இவ்வாறு அடர்ந்த வனப்பகுதி வழியாகச் செல்லும் இரண்டு நாள் பயணம் ஆன்மீக ஆற்றலைத் தூண்டும் வல்லமை கொண்டது, ஏனெனில் இது கற்கள் மற்றும் முட்களின் மீது வெறுங்காலுடன் சுமார் 50 கிமீ தூரத்திற்கு குன்றுகளின் மீது அழுக்குப் பாதையில் ஏறி இறங்கி நடந்து செல்வதை உள்ளடக்குகிறது.
பேரூர் கால்வாய்
எருமேலி முதல் சன்னிதானம் வரை வனப் பாதை வழியாக வரும் பக்தர்களுக்கான முக்கிய அடையாளங்களில் ஒன்று பேரூர் கால்வாய் ஆகும். அதற்கு அப்பால், சமதளத்தில் அமைந்துள்ள பூங்காவனம் என்ற புனிதத் தோப்பு உள்ளது.
இரும்பூணிக்கரை
இந்த இடம் பேரூர் கால்வாய்க்கும் சன்னிதானத்துக்கும் இடையே அமைந்துள்ளது. ஐயப்ப சுவாமியும் அவரது படையினரும் தங்கள் ஆயுதங்களை இந்தப் பகுதியில் மறைத்து வைத்ததாகக் கருதப்படுகின்றது. சிவன், முருகன் மற்றும் பலராமன் ஆகிய தெய்வங்களின் கோயில்கள் வனத்திற்குள் அமைந்துள்ளன. இரும்பூணிக்கரையைத் தாண்டிச் செல்ல வேண்டுமெனில் பக்தர்கள் வனத்துறையால் வழங்கப்படும் நுழைவு அனுமதிச்சீட்டு பெற வேண்டும்.
அரசமுடிகோட்டை
இந்த இடத்தில் ஐயப்பன் மற்றும் முருகன் ஆகிய கடவுள்களுக்கான சிறிய கோயில்கள் அமைந்துள்ளன.
காளைகெட்டி
இந்த இடம் பேரூர் கால்வாயில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் கடவுள் கணபதி ஆகியோருக்கான கோயில்கள் அமைந்துள்ளன.
அழுதாநதி
அழுதாநதி, காளைகெட்டியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சமதளப் பரப்பில் அமைந்துள்ளது. அழுதா நதி, பம்பை நதியின் கிளை நதி ஆகும். பக்தர்கள் அழுதாநதியில் நீராடிவிட்டு, அதன் படுகையில் இருந்து ஒரு கூழாங்கல்லை (மலையாளத்தில் கல்லு) எடுத்துக்கொண்டு, தொடர்ந்து கல்லிடாம்குன்று (’கூழாங்கற்கள் வீசப்படும் குன்று’) ஏறிச் செல்கின்றனர். அழுதாவைக் கடந்து சென்றால், விலங்குகள் வேட்டையாடும் உண்மையான வனப்பகுதி வருகின்றது. அதனால் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் ஆற்றைக் கடந்து செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
கல்லிடாம்குன்று
அழுதா நதியிலிருந்து ஒரு சிவப்புக் களிமண் பாதை செல்கிறது. அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் மலைப்பாதையில் ஏறிய பிறகு, ஓர் இடத்தைச் சென்றடையும் பக்தர்கள் அழுதா நதியிலிருந்து எடுத்து வந்த கூழாங்கற்களை அங்கு வீசுகின்றனர்.
இஞ்சிப்பாறைக்கோட்டை
இங்குச் செல்வதற்கும் மீண்டும் மலை ஏற வேண்டும். இங்கே ஒரு சாஸ்தா கோயில் உள்ளது, இங்குள்ள கடவுள் கோட்டயில் சாஸ்தா என அழைக்கப்படுகிறார்.
முக்குழி
பக்தர்கள் அழுதா நதியைக் கடந்த பிறகு, அடுத்த இளைப்பாறும் முக்கிய இடமாக முக்குழி விளங்குகிறது. இஞ்சிப்பாறையில் இருந்து முக்குழிக்குச் செல்ல மலையிலிருந்து இறங்கி வனம் வழியாகச் செல்ல வேண்டும். சுவாமி ஐயப்பனும் அவருடைய படையினரும் இங்கே இளைப்பாறியதாக நம்பப்படுகிறது. தங்கள் பயணத்திற்குப் பிறகு இங்கே இளைப்பாறும் பக்தர்கள் தேவைப்பட்டால் மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த இடத்தில் இரண்டு கோயில்கள் உள்ளன, ஒன்று சாஸ்தா கோயில், மற்றொன்று பகவதி கோயில்.
கரிமலை
முக்குழியில் இருந்து செல்லும் பாதை புதுச்சேரிதோடு வழியாகக் கீழிறங்கி, கரியிலாம் கால்வாய் வழியாக மேலும் கீழிறங்குகிறது. மூன்று கிலோமீட்டர் நடைப் பயணம் கரிமலை அடிவாரத்தில் முடிகிறது. பக்தர்கள் காய்ந்த இலைகளை கணபதிக்கு காணிக்கையாகச் செலுத்துகின்றனர். சபரிமலை புனிதப் பயணத்தில் கரிமலை ஏறுவது என்பது மிகக் கடினமான பகுதி ஆகும். மலையேறும் பாதை செங்குத்தாக உள்ளது மற்றும் அதில் ஏழு நிலைகளில் மட்டுமே ஏற முடியும்.
வலியானைவட்டம், செறியானைவட்டம்
கரிமலை இறங்கியவுடன், பம்பை நதிக்கு அருகில் உள்ள வலியானைவட்டத்தை ஒருவர் அடைகின்றார். இங்கு நல்ல வசதிகள் உள்ளன. பக்தர்கள் மீண்டும் பயணத்தைத் தொடர்வதற்கு முன் இங்கு தங்கள் கால்களுக்குச் சற்று ஓய்வு கொடுக்கலாம். அவர்களுடைய அடுத்த இலக்கு பம்பை நதிக்கரையில் அமைந்துள்ள செறியானைவட்டம் ஆகும். அதைத் தாண்டி மீண்டும் பயணித்தால் நீலிமலைக் குன்றை அடையலாம்.