சபரிமலை புனிதப் பயணப் பருவம் என்பது கேரளா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளும் திருவிழாக்களும் நடக்கும் காலம் ஆகும். இவற்றில் சில மிகப் பிரபலமானவையாகவும் பார்க்கத் தகுந்ததாகவும் உள்ளன


சபரிமலை உற்சவம்

சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயிலில் நடைபெறும் வருடாந்திர கோயில் திருவிழா பக்தர்களுக்கு ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஆகும். 10நாள்கள் நடைபெறும் இது மலையாளத்தின் ‘மீனம்’ மாதத்தில் நடத்தப்படுகின்றது, இது தமிழ் மாதமாகிய ‘பங்குனியில்’ (மார்ச் –ஏப்ரல்) வருகின்றது.

ஆழி பூஜை

ஆழி பூஜை, சபரிமலை புனிதப் பயணத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகின்ற சம்பிரதாய நிகழ்வு ஆகும். இது ஆன்மீக மற்றும் துறவற மனநிலையை அடைவதைக் குறிக்கின்றது. இது பக்தர்கள் நாற்பத்து ஒரு நாள்கள் விரதம் இருந்து மனதளவிலும் உடலளவிலும் குறிப்பிட்ட தூய்மையை அடைந்த பிறகு, புனிதப் பயணம் முடியும் நாளன்று மேற்கொள்ளப்படுகின்றது.

மகரவிளக்கு திருவிழா

மகர சங்கரம நாளன்று இரவு வானில் மகர நட்சத்திரம் உதயமாகும் வானியல் நிகழ்வுக்குச் சாட்சியாக பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். மாலையில், மகரவிளக்கு மற்றும் அதைத் தொடர்ந்து திருவிளக்கு வழிபாடுகளுக்குப் பிறகு, மகா ஊர்வலம் தொடங்குகிறது. இந்தத் திருவிழா மகரம் மாதத்தின் (ஜனவரி மத்தியில்) முதல் நாள் முதல் ஐந்தாம் நாள் வரை நடக்கின்றது.

சபரிமலை நிரப்புத்தரி

விவசாயத்தின் செழுமை மற்றும் வளத்தின் சின்னமாக விளங்கும் நிரப்புத்தரி விழாவை மலையாளிகள் தங்கள் வீடுகளில் சிறு நெல்மணிக் கட்டுகளைத் தொங்கவிடுவதன் மூலம் கொண்டாடுகின்றனர். இந்தச் சடங்கும் சபரிமலையின் முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும். பாரம்பரியமாக, திருவிதாங்கூர் அரச குடும்பமும் நிரப்புத்தரி தினத்தைக் கொண்டாடுகின்றது. நிரப்புத்தரிக்கு முந்தைய நாள், சபரிமலை கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கப்படுகின்றன. காலையில் நெல்மணிக் கட்டுகள் பதினெட்டாம்படியில் (18 படிகள்) தந்திரியால் பெறப்படுகின்றன. அதன் பின் நெல்மணிக் கட்டுகள் கிழக்கு மண்டபத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன. 

பங்குனித் திருவிழா

சபரிமலையின் வருடாந்திரத் திருவிழாவாகிய பங்குனி உத்திரத் திருவிழா தமிழ் மாதமாகிய பங்குனி மாதத்தில் (மார்ச் – ஏப்ரல்) நடைபெறுகின்றது, இது மலையாளத்தின் மீனம் மாதத்தில் வருகின்றது. இந்த பத்து நாள் திருவிழா பள்ளி வேட்டை (வேட்டையாடுதல் சடங்கு) மற்றும் ஆராட்டு (புனிதக் குளியல்) போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகளுடன் கொண்டாடப்படுகின்றது. திருவிழாவானது

சன்னிதானத்தில் ஓணம்

கேரளாவின் மாபெரும் பண்டிகையான ஓணம் பண்டிகை சபரிமலையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.சிங்கம் (ஆகஸ்டு – செப்டம்பர்) மலையாள மாதத்தில் மாதாந்திர பூஜைகளுடன் விழாக்கள் தொடங்குகின்றன. மாதாந்திர பூஜைகளுக்குப் பிறகு ஓணம் தினத்தன்று கோயில் மீண்டும் திறக்கப்படும். உத்தராடத்திற்கு முந்தைய நாளில், தந்திரி கோயில் கதவுகளைத் திறக்கிறார், பூஜை (சடங்குகள்) தொடங்குகின்றன. 

பிரதிஷ்டை தினம்

பிரதிஷ்டை தினம் அல்லது நிறுவல் தினம் என்பது சபரிமலையில் சிலை நிறுவப்பட்டதன் ஆண்டு நினைவு தினக் கொண்டாட்டம் ஆகும். இந்த நாளில் செய்யப்படும் சடங்குகள் சிலை நிறுவப்பட்ட நாளன்று உண்மையில் செய்யப்பட்ட சடங்குகளின் சுருக்கமான வடிவங்களாகும். இந்தப் பூஜைகளும் தாந்த்ரீகச் செயல்முறைகளும் மனித அல்லது இயற்கைக் காரணங்களால் ஆண்டு முழுவதும் சேர்ந்த அசுத்தங்களில் இருந்து சிலையைச் சுத்தம் செய்து, பிராண பிரதிஷ்டை மூலம் அதன் முழுச் சக்தியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. கலச பூஜை மற்றும் கலச அபிஷேகம் ஆகியவை இதில் இடம்பெறும் முக்கியச் சடங்குகள் ஆகும்.

குருதி

குருதி என்பது பண்டைக் காலத்திலிருந்தே சபரிமலை கோயிலின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்துள்ளது. இந்தப் புனிதச் சடங்கு மாளிகைப்புரம் சன்னதியின் பின்னால் அமைந்துள்ள மணிமண்டபத்தின் முன் திறந்தவெளியில் நடத்தப்படுகின்றது. மகரவிளக்கு உற்சவத்தின் ஐந்தாம் நாளன்று, மாபெரும் ஊர்வலத்தின் கடைசி நாளைக் குறிக்கும் விதமாக சுவாமி ஐயப்பன் சரம்குத்திக்கு ஏறுகிறார். அத்தாழ பூஜை முடிந்த பிறகு, சரம்குத்திக்கான ஊர்வலம் மணிமண்டபத்தில் இருந்து தொடங்குகின்றது. அரக்கர்கள் மற்றும் மலை தெய்வங்கள் புடைசூழ அவர் அரண்மணைக்கு அமைதியாகத் திரும்பியதும், சடங்குகள் தொடர்கின்றன.

களமெழுத்து

களமெழுத்து என்பது சபரிமலையின் குறிப்பிடத்தக்க சடங்கு ஆகும், முக்கியமாக இது மகரவிளக்கு திருவிழாவுடன் தொடர்புடையதாகும். இந்தச் சடங்கு, மாளிகைப்புரத்தில் சுவாமி ஐயப்பனின் பூர்வீக வசிப்பிடமாகக் கருதப்படுகின்ற மணிமண்டபத்தில் நடக்கின்றது. மணிமண்டபத்தின் உள்ளே நடைபெறும் களமெழுத்து சடங்கு மகர சங்கரம நாளன்று தொடங்கி ஐந்து நாள்கள் நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாளின் களம் (வண்ணப் பொடிகளைக் கொண்டு தரையில் தெய்வங்களின் முப்பரிமாண உருவங்களை வடிவமைத்தல்) என்பது சுவாமி ஐயப்பனின் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைக் குறிக்கின்றது, மற்றும் ஒன்றாக கடவுளை நோக்கிய அக் குழந்தையின் பயணத்தையும் அவை சித்தரிக்கின்றன.

நாயாட்டு விளி

நாயாட்டு விளி என்பது மகரவிளக்கு உற்சவத்தின் ஒரு பகுதியாக சபரிமலையில் நடத்தப்படுகின்ற அரிதான மற்றும் முக்கியமான சடங்கு ஆகும். இந்தச் சடங்கு ஐயப்ப புராணத்தை வசன வடிவில் கூறுவதை உள்ளடக்குகின்றது. மணிமண்டபத்தில் நடைபெறும் களமெழுத்து சடங்கு மற்றும் அத்தாழ பூஜைக்குப் பிறகு மாளிகைப்புரத்திலிருந்து எழுநல்லாத்து (ஊர்வலம்) தொடங்குகின்றது. அதன் பின் தொடர்ச்சியாக நான்கு நாள்களுக்கு நாயாட்டு விளியுடன் சுவாமி ஐயப்பன் பதினெட்டாம்படி (18 படிகள்) ஏறுகிறார்.

பம்பை சதயா (பம்பை விருந்து)

பம்பை சதயா (பம்பை விருந்து) என்பது 41-நாள் சடங்கு நோன்புக்குப் பிறகு சபரிமலைக்கு வருகின்ற பக்தர்களை ஊக்குவிக்கும் பாரம்பரியம் ஆகும். மகரஜோதி மற்றும் மகரவிளக்கைப் பார்ப்பதற்காக பாரம்பரிய கானனபாதை வழியாக வரும் இந்தப் புனிதப் பயணிகள், நீலிமலையில் ஏறுவதற்கு முன் பம்பையில் சதயத்தில் (விருந்து) பங்கேற்கின்றனர்.

பம்பை விளக்கு

மறவர் படையை ஐயப்பன் வெற்றிகொண்டதற்கு அடையாளமாக ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் விளக்கேற்றுகின்றனர். அம்பலப்புழா மற்றும் ஆலங்காடு பகுதியில் இருந்து வரும் புனிதப் பயணிகள், எருமேலியில் பேட்டை துள்ளல் முடிந்த பிறகு கரிமலை வழியாகப் பம்பையை அடைகின்றனர். இதைத் தொடர்ந்து, பம்பை சதயா விருந்தில் அவர்கள் பங்கேற்கின்றனர்.

விஷுகணி

பெருமதிப்பிற்குரிய குருவாயூர் கோயிலுடன் சேர்த்து, புனிதமான விஷுகணியைக் காண தெய்வீக மேடம் மாதத்தின்போது (ஏப்ரல்-மே) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் தெய்வீக புனிதப் பயணத் தலமாக சபரிமலை விளங்குகிறது. விஷு நாளன்று, கண்ணாடி, புதிய பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் புத்தாடைகளுடன் விஷுகணி எனப்படும் ஒரு சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்படுகின்றது. காலையில் எழுந்தவுடன் இந்த மங்கலகரமான பொருள்களை முதல் பார்வையாகப் பார்த்த பின் புத்தாண்டைத் தொடங்க வேண்டும் என்பதே விஷுகணியின் நோக்கம் ஆகும்.

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top