புகழ்பெற்ற சபரிமலைக் கோயிலின் வரலாறு இதிகாசங்களும் புராணக் கதைகளும் நிறைந்து காணப்படுகின்றது. ஐயப்பனின் கதை கோயிலுடனும் அதன் தோற்றத்துடனும் தொடர்புடையதாக உள்ளது. சாஸ்தா அவதாரமாகப் பிறந்த ஐயப்பன், சிவபெருமானுக்கும் மோகினி அவதாரத்தில் இருந்த விஷ்ணு பகவானுக்கும் மகனாகப் பிறந்தார். மகிஷி என்ற அரக்கியால் ஏற்பட்ட அச்சுறுத்தலைப் போக்குவதே ஐயப்பன் அவதாரத்தின் நோக்கம் ஆகும்.

தனது அவதாரத்தின் நோக்கம் முடிந்தவுடன், ஐயப்பன் தனது வளர்ப்புத் தந்தையாகிய மன்னர் இராஜசேகரனிடம் திரும்பி வந்து, தேவலோகம் செல்கின்ற தனது முடிவைத் தெரிவித்தார். அவர் மன்னனுக்கு ஒரு வரம் கொடுக்க விரும்பினார், அதாவது கடவுளின் கௌரவிக்கும் விதமாக ஒரு கோயில் கட்டுவதற்குப் பூமியில் பொருத்தமான இடத்தைக் கடவுளே கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும். அதற்காக ஐயப்பன் எய்த அம்பு சபரிமலையில் சென்று விழுந்தது. இவ்வாறு, மன்னர் இராஜசேகரனின் ஆதரவின் கீழ், சபரிமலையில் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் கட்டப்பட்டது.

20-ஆம் நூற்றாண்டின் மத்தியக் காலம் வரை, சபரிமலை ஒரு பிரபலமான புனிதப் பயணத் தலமாக இருக்கவில்லை. 1950-இல் கோயில் தீ வைத்து எரிக்கப்பட்ட பிறகு இது மறுநிர்மாணம் செய்யப்பட்டது. தற்போதுள்ள பஞ்சலோக சிலை அப்போது தான் நிறுவப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் பல இலட்சக் கணக்கான பக்தர்கள் வருகை புரியும் முக்கியமான புனிதத் தலமாக இக் கோயில் முக்கியத்துவம் பெற்றது. 1985-இல், 18 புனிதப் படிகளும் பஞ்சலோகத்தால் கவசம் இடப்பட்டது.

இன்று, “தத்வமஸி” (நீயே அதுவாக இருக்கிறாய்) என்ற கருத்து கோயிலையும் புனிதப் பயணத்தையும் அடக்கியாளும் முக்கியத் தத்துவமாக விளங்குகிறது. உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இக் கோயில் வளர்ந்துள்ளது.

சீரப்பஞ்சிரா களரி

புகழ்பெற்ற சீரப்பஞ்சிரா தரவாடு (பரம்பரை வீடு) ஆலப்புழா மாவட்டம் முஹம்மாவில் அமைந்துள்ளது. இது ஐயப்ப புராணத்துடன் மிகுந்த தொடர்பு கொண்டுள்ளது. இது சீரப்பஞ்சிரா தரவாடு மூலம் நடத்தப்பட்ட களரி [பயிற்சி மைதானம்]-இல் அமைந்திருந்தது, இங்கு பயிற்சி எடுத்துக்கொண்ட சுவாமி ஐயப்பன் தற்காப்புக் கலையில் நிபுணராகத் தேர்ந்தார். சீரப்பஞ்சிரா குடும்பத்தைச் சேர்ந்த பூங்கொடி எனும் பெண் ஐயப்ப சுவாமியைக் காதலித்தார் என்றும், அவர் தான் பின்னர் மாளிகைப்புரத்தம்மா ஆகிவிட்டார் என்றும் நம்புகின்ற சில பக்தர்களும் உள்ளனர். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த களரியும் ஒரு வாளும் (ஐயப்ப சுவாமியால் பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகின்றது) இன்றும் தரவாடுவில் பாதுகாக்கப்படுகின்றது. 

பந்தளம் அரண்மனை

கேரளாவின் புராணங்களிலும் சரித்திரத்திலும் தனது இராஜ்ஜியத்தை அழியாமல் நிலைநிறுத்தியவர் பந்தளம் மன்னர். அவருக்கும் அவர் தத்தெடுத்து வளர்த்த மகனாகிய மணிகண்டனுக்கும் இடையிலான தந்தை-மகன் உறவு சபரிமலையுடன் பிரிக்க முடியாத தொடர்பைக் கொண்டுள்ளது. இன்றும் கூட, புண்ணியத் தலமாகிய சபரிமலை தொடர்புடைய சில சடங்குகள் அந்தப் பிணைப்பை உறுதிப்படுத்துவதாகவும் மற்றும் வலுப்படுத்துவதாகவும் உள்ளன. கிபி 377-இல் பந்தளம் சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதில் மதுரையின் பாண்டிய வம்சத்தின் செம்பழன்னூர் பிரிவு முக்கியப் பங்கு வகித்ததாக நம்பப்படுகின்றது. கிபி 996-இல், பந்தளம் திருவிதாங்கூர் சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்கப்பட்டது.

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top