மகர சங்கரம நாளன்று இரவு வானில் மகர நட்சத்திரம் உதயமாகும் வானியல் நிகழ்வுக்குச் சாட்சியாக பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். மாலையில், மகரவிளக்கு மற்றும் அதைத் தொடர்ந்து திருவிளக்கு வழிபாடுகளுக்குப் பிறகு, மகா ஊர்வலம் தொடங்குகிறது. இந்தத் திருவிழா மகரம் மாதத்தின் (ஜனவரி மத்தியில்) முதல் நாள் முதல் ஐந்தாம் நாள் வரை நடக்கின்றது.

மகரவிளக்கு திருவிழாவின்போது நடக்கும் முக்கியச் சடங்குகளில், சன்னதியின் கதவுகளை மூடுவதற்கு முன் நிகழ்த்தப்படுகின்ற களமெழுத்துப் பாட்டு, நாயாட்டு விளி மற்றும் குருதி ஆகியவை உள்ளடங்கும். நான்கு நாள்களுக்கு, மாளிகைப்புரத்தில் இருந்து பதினெட்டாம்படி (18 படிகள்) வரை சடங்குகள் நடத்தப்படுகின்றன, ஐந்தாம் நாளன்று கவனம் சரம்குத்திக்குத் திரும்புகின்றது. இந்தச் செயல்பாடுகள் அத்தாழ பூஜைக்குப் பின்னர் தொடங்குகின்றன. 

திருவாபரணத்தைக் கொண்டுள்ள இரண்டு புனிதப் பேழைகள் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன. இசை வாத்தியங்கள் முழங்க, கொடிகள், குடைகள் மற்றும் திடம்பு (தெய்வத்தின் அலங்கரிக்கப்பட்ட உற்சவர்) புடைசூழ பதினெட்டாம்படி (18 படிகள்) ஏறும் நிகழ்வு வண்ணமயமாக நடைபெறுகின்றது.

ஐந்தாம் நாளன்று, சரம்குத்திக்கான பயணம் தொடங்குகின்றது. அத்தாழ பூஜைக்குப் பிறகு, மணிமண்டபத்திலிருந்து சரம்குத்திக்கு ஊர்வலம் நகர்கிறது. இந்த ஊர்வலத்தின்போது சுவாமி ஐயப்பன் மீசையுடன் ஒரு வலிமை மிக்க வீரராகச் சித்தரிக்கப்படுகிறார். சரம்குத்தியை அடைந்து நாயாட்டு விளி முடிக்கப்பட்ட பிறகு, சுவாமி ஐயப்பன் எந்த இசைக் கருவிகளும் இசைக்கப்படாமல் மணிமண்டபத்திற்கு அமைதியாகத் திரும்புகிறார். அப்படி அமைதியாகத் திரும்பும்போது அவர் அரக்கர்கள் மற்றும் மலை தெய்வங்கள் புடைசூழ வருவதாகவும், இது அதன் புனிதத் தன்மையைக் குறிப்பதாகவும் நம்பப்படுகின்றது. 

மகரவிளக்கு கொண்டாட்டங்களின் நிறைவைக் குறிக்கும் வகையில், அடுத்த நாள் இரவில் குருதி சடங்குக்குப் பிறகு திருவிழா நிறைவடைகின்றது. 

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top