English
தமிழ்
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
சபரிமலை கோயில் புராணத்தில் மணிமண்டபம் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. இது சன்னிதானத்தில் தெய்வம் வசிக்கும் புனிதத்தன்மை வாய்ந்த இடமாக நம்பப்படுகின்றது. இந்த இடம் வனத்தின் மத்தியில் அமைந்துள்ளது. ‘மறவர் படையைத்’ தோற்கடித்த பின் சுவாமி ஐயப்பன் இங்கு ஓய்வெடுத்தார் என்பது ஐதீகம். இந்த இடம் புனிதமானது, ஏனென்றால் இங்கு தான் அவர் ஆழ்ந்த தியான நிலையை எய்தினார். இந்தத் தியானத்தின்போது அவர் வழிபட்ட மூன்று தாந்த்ரீக வட்டங்களில் ஒன்று இங்கு அமைந்திருப்பதாகவும், மற்ற இரண்டு வட்டங்கள் சன்னிதானம் மற்றும் பதினெட்டாம்படியில் அமைந்திருப்பதாகவும் நம்பப்படுகின்றது. தனது இருப்பிடத்தைத் தேர்ந்தெடுப்பதற்காக சுவாமி ஐயப்பன் எய்த அம்பு இந்த இடத்தில் தான் விழுந்தது எனவும் ஒரு சிலர் நம்புகின்றனர். அவரது தந்தையாகிய பந்தளம் மன்னர் இந்த இடத்தில் கோயில் கட்ட உத்தரவிட்டார்.
மணிமண்டபம் மாளிகைப்புரத்தம்மா கோயில் கருவறைக்கு அருகில் அமைந்துள்ளது. மணிமண்டபத்தின் சுவர்களில் பித்தளைத் தகடுகள் பதிக்கப்பட்டு, அதில் சுவாமி ஐயப்பன் தொடர்பான கதைகள் பொறிக்கப்பட்டுள்ளன. மணிமண்டபம் மகர விளக்குத் திருவிழாவின்போது ஆறு நாள்களுக்கு மட்டுமே திறந்திருக்கின்றது. இறுதி வழிபாடும் நிறைவுப் படையலும் இங்கு தான் செய்யப்படுகின்றன.