English
தமிழ்
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
சுவாமி ஐயப்பனின் தெய்வீகப் பிறப்புக்குப் பின்னால் உள்ள புராணக் கதையை அறிந்துகொள்ளுங்கள்
தர்ம சாஸ்தா மற்றும் மணிகண்டன் எனவும் அழைக்கப்படுகின்ற சுவாமி ஐயப்பன் பின்னால் உள்ள மனதைக் கவரும் புராணக் கதையை அறிந்துகொள்ளுங்கள், இவரது தெய்வீகப் பிறப்பும் வீரதீரச் செயல்களும் சபரிமலை கோயில் புராணத்தின் மையமாக விளங்குகின்றன. கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் அரவணைப்பில் அமைந்துள்ள இந்தப் புனிதக் கோயில் பல இலட்சக்கணக்கான பக்தர்களின் இதயங்களில் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்துள்ளது. சுவாமி ஐயப்பனின் வசீகரிக்கும் கதையில் பயணிப்பதன் மூலம், அவரது தனித்துவமான பிறப்பு முதல் அவரது தெய்வீகச் செயல்கள் வரையிலும் மற்றும் இந்தியாவின் உயர் மதிப்புக்குரிய புனிதத் தலங்களில் ஒன்று நிறுவப்பட்ட வரலாற்றையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
ஐயப்பன், சிவன் மற்றும் விஷ்ணு (அவரது வசீகரிக்கும் கவர்ச்சி கொண்ட மோகினி அவதாரத்தில்) ஆகிய கடவுள்களின் மகனாகப் பிறந்தார் என நம்பப்படுகின்றது. மகிஷாசுரன் துர்க்கா தேவியால் கொல்லப்பட்டபோது அவனது சகோதரியாகிய அரக்கி மகிஷி அதற்குப் பழிவாங்க முடிவு செய்தாள். அதற்காகக் கடுமையான தவம் புரிந்தாள், இறுதியாக மகிஷியின் முன் பிரம்மா காட்சி தந்தார். அவளது வேண்டுகோளின்படி விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் பிறக்கும் மகனால் மட்டுமே அவளைக் கொல்ல முடியும் என்ற வரத்தை அவளுக்கு அளித்தார். அந்த வரத்தைப் பெற்ற பிறகு அவள் அடக்க முடியாத தீவிர சக்தியாக உருவெடுத்தாள், எல்லோர் மீதும் கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டாள். அவளது அட்டூழியங்களைத் தாங்க முடியாத தேவர்கள் விஷ்ணு பகவான் இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்று நாடினார்கள். அதன் காரணமாக, விஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுப்பது எனவும் சிவபெருமானுடன் இணைந்து ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது எனவும் தேவலோகத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு சிவபெருமானுக்கும் விஷ்ணு பகவானுக்கும் மகனாக ஐயப்பன் பிறந்தார். மேலும், சிவபெருமானின் தீவிர பக்தராகிய பந்தளம் மன்னர் இராஜசேகரனின் பராமரிப்பின் கீழ் அவரை அனுப்புவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
ஒருமுறை காட்டில் வேட்டையாடச் சென்ற மன்னர் இராஜசேகரன் அங்கே ஒரு பச்சிளங் குழந்தை தனியே இருப்பதைப் பார்த்தார். தனக்கென குழந்தை இல்லாத வருத்தத்தில் இருந்த மன்னர் அப் பச்சிளங் குழந்தையை வளர்க்க முடிவு செய்து அதைப் பந்தளம் அரண்மனைக்குத் தன்னுடன் எடுத்துச் சென்றார். அக் குழந்தையின் கழுத்தில் ஒரு மணி இருந்த காரணத்தால் அக் குழந்தைக்கு அவர் ‘மணிகண்டன்’ எனப் பெயரிட்டார். அன்று முதல், விஷ்ணு பகவான் மற்றும் சிவபெருமானின் தெய்வீகத் தன்மை ஒருங்கே அமையப்பெற்ற மணிகண்டன் ஓர் இளவரசனாக வளரத் தொடங்கினார். இதன் பின், மன்னர் இராஜசேகரனுக்கும் அவரது மனைவிக்கும் விரைவில் ஒரு குழந்தை பிறந்தது. மணிகண்டனைத் தன்னுடன் அழைத்து வந்ததாலேயே இந்த அதிர்ஷ்டம் தனக்குக் கிடைத்ததாகக் கருதி, மன்னர் மணிகண்டனைத் தனது வாரிசாக அறிவிக்க முடிவு செய்தார்.
ஆனாலும், மன்னருக்குப் பின் மகுடம் சூட்டிக்கொள்வதே தனது இலட்சியம் என மனதிற்குள் இரகசியமான ஆசை வைத்திருந்த ஒரு மந்திரிக்கு இது பிடிக்கவில்லை. அவர்களின் இரத்த சம்பந்தமான குழந்தை மட்டுமே அவர்களுடைய சட்டப்பூர்வ வாரிசாக இருக்க முடியும் என அவர் ராணியை நம்ப வைத்தார். அவரது ஆலோசனையின்படி, தனக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது போல ராணி போலியாக நடித்தார். அமைச்சரின் சூழ்ச்சிக்கு அகப்பட்ட ராணியின் வைத்தியர் ராணியின் நோயைக் குணப்படுத்த வேண்டுமெனில் புலிப் பால் கொண்டுவர வேண்டும் எனக் கூறினார். மணிகண்டனை எப்படியாவது வற்புறுத்தி வனத்திற்குள் அனுப்பினால் அவன் கொடிய விலங்குகளுக்கு இரையாகி விடுவான் எனச் சூழ்ச்சியாளர்கள் திட்டமிட்டனர். ஆனாலும், அரசர் தனது படைவீரர்களை வனத்திற்குள் அனுப்பினார், ஆனால் அவர்களால் புலிப் பால் கொண்டு வர முடியவில்லை.
மணிகண்டன் ஒரு குழந்தையாக இருந்தாலும் கூட, தாமாக முன்வந்து வனத்திற்குள் செல்ல ஒப்புக்கொண்டான். பெரும் சமாதானத்திற்குப் பிறகு மன்னரின் அனுமதியை அவன் பெற்றான். அடர்ந்த வனத்திற்குள் செல்வதற்கான தனது பயணத்தைத் தொடங்கினான். அவன் வனத்திற்குள் நுழைந்தவுடன் சிவபெருமானின் பூதங்கள் அவனை உன்னிப்பாகக் கண்காணித்தனர். வழியில் தேவலோகத்தில் மகிஷி செய்த பல அட்டூழியச் சம்பவங்களை அவர் கண்ணுற்றார். தெய்வீகத் திட்டம் தீர்மானித்தபடியே நடந்து கொண்டிருந்தது. மணிகண்டன் தேவலோகத்தில் மகிஷியுடன் சண்டையிட்டு அவளை மீண்டும் பூமிக்குத் தள்ளினான். ஒரு பயங்கரமான போர் தொடர்ந்தது, இறுதியில் மணிகண்டன் மகிஷியின் மார்பின் மீது ஏறி ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கியது மண்ணுலகையும் தேவலோகத்தையும் உலுக்கியது. அதன் பின் மகிஷி, மணிகண்டன் சாதாரணக் குழந்தை அல்ல என்பதையும் அவன் சிவபெருமான் மற்றும் விஷ்ணு பகவானின் குழந்தை என்பதையும் அறிந்தாள். அதன் பின் விரைவில் அவள் இறந்துவிட்டாள்.
மணிகண்டன் மீண்டும் வனத்திற்குள் நுழைந்தபோது, சிவபெருமான் அவன் முன் காட்சி தந்து அவனது தெய்வீகப் பணியை முடித்துவிட்டதாக அவனிடம் தெரிவித்தார். புலிப் பால் கொண்டுவர இந்திர பகவானின் உதவியைப் பெற்றுத் தருவதாக ஐயப்பனுக்கு அவர் வாக்குறுதி அளித்தார். இந்திரன் ஒரு புலியாக மாறி பெண் தெய்வங்கள் பின்தொடர வந்தார். பெண் புலிகள் புடைசூழ, புலியின் மீது ஏறி அமர்ந்தவாறு மணிகண்டன் பந்தளம் அரண்மனையை வந்தடைந்தான். மன்னர் இதை ஆச்சரியத்துடன் பார்த்தார், அப்போது ஒரு துறவி அங்கு தோன்றி அவரது வளர்ப்பு மகனின் உண்மையான அடையாளத்தைப் பற்றி அவரிடம் கூறினார்.
திரும்பி வந்த ஐயப்பன் தனது அவதாரத்தின் நோக்கம் நிறைவடைந்ததாகவும், மீண்டும் தேவலோகம் செல்லப் போவதாகவும் கூறினார். அதற்கு முன், அவர் மன்னனுக்கு ஒரு வரம் கொடுக்க விரும்பினார். அதற்கு, சுவாமி ஐயப்பனைக் கௌரவிக்கும் விதமாக ஒரு கோயில் கட்டுவதற்குப் பூமியில் பொருத்தமான இடத்தைக் கடவுளே கண்டுபிடித்துக் கொடுக்குமாறு மன்னர் வேண்டினார். அதற்காக ஐயப்பன் எய்த அம்பு சபரிமலையில் சென்று விழுந்தது. இனி வரும் காலமெல்லாம் சபரிமலையே தனது தெய்வீகத் தன்மை ஜொலிக்கும் இடமாக விளங்கும் எனக் கடவுள் தீர்மானித்தார். அதன் பின் அவர் தேவலோகம் சென்றுவிட்டார். இவ்வாறு, மன்னர் இராஜசேகரனின் ஆதரவின் கீழ், சபரிமலையில் ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் கட்டப்பட்டது.