English
தமிழ்
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
முக்கியமான சபரிமலை புனிதப் பயணப் பருவம் நவம்பர் முதல் ஜனவரி வரை ஆகும்
சபரிமலை யாத்திரை
சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் இந்தியாவில் உள்ள மிகப் பிரபலமான, எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படுகின்ற, வனத்திற்குள் அமைந்த புனிதப் பயணக் கோயில்களில் ஒன்றாகும். ஒரு காலத்தில், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பக்தர்களைக் கவர்ந்த கோயிலாகவும் இது கருதப்பட்டது. மலை உச்சியில் அமைந்துள்ள இந்தப் புனிதத் தலம் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள பெரியார் புலிகள் காப்பக வனங்களுக்குள் அமைந்துள்ளது. அதிகாரப்பூர்வமற்ற பதிவேடுகளின்படி, இந்தக் கோயிலுக்கு ஒவ்வோர் ஆண்டும் மூன்று முதல் ஐந்து கோடி பக்தர்கள் வருகை புரிவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஸ்ரீ தர்மசாஸ்தா எனவும் அழைக்கப்படுகின்ற சுவாமி ஐயப்பன் இந்தக் கோயிலின் பிரதானக் கடவுளாக விளங்குகிறார். சபரிமலையில் சுவாமி ஐயப்பனின் ஆன்மா தர்மசாஸ்தாவுடன் ஐக்கியமானதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
சபரிமலை புனிதப் பயணம் தொடர்பான சடங்குகளும் மரபுகளும் இந்தக் கோயிலை இந்தியாவின் மற்ற கோயில்களில் இருந்து வேறுபடுத்துகின்றது. இந்தக் கோயில் புனிதப் பயணிகளுக்கோ அல்லது பூஜைகளுக்கோ ஆண்டு முழுவதும் திறந்திருப்பதில்லை. கோயில் திறக்கும் மற்றும் மூடும் தேதிகள் மலையாள நாள்காட்டியின்படி தீர்மானிக்கப்படுகின்றன. மண்டலபூஜை மற்றும் மகரவிளக்கு ஆகியவை கோயிலின் முதன்மையான புனிதப் பயணப் பருவங்களாக விளங்குகின்றன.
சபரிமலையில் மிக முக்கியமான புனிதப் பயணப் பருவம் விருச்சிகம் என்ற மலையாள மாதத்தின் [நவம்பர்-டிசம்பர்] முதல் நாளன்று தொடங்கி, தனு என்ற மலையாள மாதத்தின் [டிசம்பர்-ஜனவரி] பதினொன்றாம் நாள் வரை நீடிக்கின்றது. 41 நாள்களைக் கொண்ட இந்தப் புனிதப் பயண நேரம் பெரும்பாலும் சபரிமலையின் மண்டல காலம் என அழைக்கப்படுகின்றது. மண்டலபூஜை நாள்களில் சபரிமலையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
சபரிமலைக்குச் செல்ல விரும்பும் ஒவ்வொரு பக்தரும் பல கடுமையான சடங்குகளையும் மரபுகளையும் பின்பற்ற வேண்டும். அவர்கள் 41 நாள்களுக்குக் கடுமையான விரதம் இருப்பதுடன் பிரம்மச்சரியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் கோயிலுக்குச் சென்று தங்கள் பாவங்களைக் கழுவுவதற்கு முன் மாலை அணிய வேண்டும். சபரிமலையில் சுவாமி ஐயப்பன் முன்னிலையில் ஆறுதல் பெற கஷ்டங்கள் நிறைந்த ஆபத்தான பாதைகள் வழியாகப் புறப்படும் பக்தர்கள் கரிமலையைக் கடந்த பின், நீலிமலையைக் கடந்து செல்வதற்கு முன் பம்பையின் புனித நீரில் நீராடுகின்றனர். சபரிமலை வரை பாரம்பரிய இருமுடிக்கெட்டு (புனிதமான இரண்டு பகுதிகள் கொண்ட படையல்) தாங்கிச் செல்லும் பக்தர்கள் மட்டுமே 18 புனிதப் படிகள் வழியாக ஏறி பிரதானக் கடவுளைத் தரிசனம் செய்யவும் வழிபடவும் அனுமதிக்கப்படுகின்றனர். கடுமையான சடங்குகளும் மரபுகளும், உடை, உணவு போன்றவற்றில் 41 நாள்கள் கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகளும் சபரிமலைக்குச் செல்லும் புனிதப் பயணிகளை இந்தியாவின் பிற கோயில்களுக்குச் செல்லும் புனிதப் பயணிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.
சபரிமலையில் மண்டல காலம் முடிந்தவுடன் அடுத்த முக்கியமான புனிதப் பயணக் காலம் மகரவிளக்குத் திருவிழா ஆகும், இது கோயிலின் கொண்டாட்டங்களைப் புத்தம் புதிய நிலைக்கு இட்டுச் செல்கிறது. மகரவிளக்கு ஒவ்வோர் ஆண்டும் மகர சங்கராந்தி (ஜனவரி மத்தியில்) நாளன்று கடைப்பிடிக்கப்படுகின்றது, இது பருவத்தில் உச்சநிலையைக் குறிக்கின்றது. சபரிமலைக்கு அருகில் அமைந்துள்ள பொன்னம்பலமேடு என்ற குன்றின் மீது மகரவிளக்கு நாளன்று மகரஜோதி ஏற்றுவது என்பது இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் முக்கியச் சடங்கு ஆகும். மகரஜோதியை தரிசனம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை சன்னிதானம், பாண்டித்தாவளம், சரம்குத்தி, மரக்கூட்டம், புல்மேடு, நீலிமலை உச்சி, சாலக்கயம் மற்றும் அட்டத்தோடு ஆகிய இடங்களில் இருந்து காண முடியும். மகரவிளக்குடன் தொடர்புடைய மற்றொரு அற்புதமான நிகழ்வு திருவாபரண ஊர்வலம் ஆகும். சுவாமி ஐயப்பனின் புனித ஆபரணங்களின் இந்தச் சம்பிரதாய ஊர்வலம் ஒவ்வோர் ஆண்டும் மகரவிளக்கு திருவிழாவிற்கு மூன்று நாள்கள் முன்னதாக பந்தளம் வலியகோயிக்கல் கோயிலில் தொடங்கி, மகரவிளக்கு அன்று சன்னிதானம் சென்றடையும். இந்தத் திருவிழா முடிந்தவுடன், இந்தக் கோயிலில் ஆண்டின் மிக முக்கியமான நேரம் முடிவுக்கு வருகின்றது.
இந்த இரண்டு நிகழ்வுகளைத் தவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாள்களுக்கும் விஷு மற்றும் ஓணம் போன்ற பிற சுப நாள்களுக்கும் கோயில் திறக்கின்றது. இந்த நாள்களில் தினமும் காலையில் அதிகாலை 3.00 மணிக்கு சடங்குகளுக்காக கருவறை திறக்கப்படும். ஹரிவராசனம் இசைத்த பிறகு 11.00 PM மணிக்கு மூடப்படுகின்றது.
ஹரிவராசனம்
ஒவ்வோர் இரவும், சபரிமலை கோயிலில் கருவறை மூடப்படுவதற்கு முன் இறைவனான ஐயப்பனை உறங்க வைப்பதற்கான தாலாட்டுப் பாடலாக ஒரு தெய்வீகப் பாடல் பாடப்படுகின்றது. இந்தப் பாடல் ஹரிவராசனம் என்ற உலகப் புகழ்பெற்ற பாடல் ஆகும். பாடல் மெதுவாக முடிவடையும்போது, இளைய அர்ச்சகர்கள் கருவறையில் இருந்து ஒருவர் பின் ஒருவராக வெளியேறுகின்றனர். இதைத் தொடர்ந்து மேல்சாந்தி என அழைக்கப்படும் தலைமை அர்ச்சகர் ஸ்ரீகோவிலில் எரியும் புனித தீபங்களை அணைத்துவிட்டுக் கருவறையை மூடுகின்றார். இந்தச் சடங்கை சபரிமலை கோயிலில் மட்டுமே காண முடியும்.
ஹரிவராசனம் கீர்த்தனம் சுவாமி ஐயப்பனுக்கான (தர்மசாஸ்தா எனவும் அழைக்கப்படுகிறார்) விளிப்பாடல் ஆகும், இது அவரை மேன்மைப்படுத்துகின்றது மற்றும் அவரைத் தலை முதல் கால் வரை விவரிக்கின்றது. ஹரிவராசனம் கீர்த்தனம் 16 பாடல்களைக் கொண்டதாகும். இவற்றில் 8 பாடல்கள் சபரிமலையில் ஒவ்வோர் இரவும் பாடப்படுகின்றன.