English
தமிழ்
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு முன் கடைப்பிடிக்க வேண்டியவற்றையும் நடைமுறைகளையும் பற்றி அறிந்துகொள்ளவும்
புனிதப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் பக்தர்கள் 41 நாள்கள் விரதம் (பிரம்மச்சரியம் மற்றும் சைவ உணவு முறை) அனுஷ்டிக்க வேண்டும். சபரிமலைக்குச் செல்வதற்கு முன், பக்தர்கள் இருமுடிக்கெட்டு தயாரிக்கப்படுகின்ற கெட்டுநிரா என்ற சடங்கில் பங்கேற்கின்றனர். இருமுடிக்கெட்டு என்பது இரண்டு அறைகள் கொண்ட ஒரு சிறு பை ஆகும். பையின் முதலாவது அறை முன்முடி எனப்படுகின்றது, பின்புற அறை பின்முடி எனப்படுகின்றது. முன்முடி படையல்களையும் கோயிலுக்கான பூஜைப் பொருள்களையும் கொண்டுள்ளது, பின்முடி பக்தர்களின் சொந்த உடைமைகளை எடுத்துச் செல்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது
உன்னதமான ஆன்மீக அனுபவத்திற்குரிய தலமாகிய சபரிமலை நீங்கள் தினமும் அல்லது எந்த நேரத்திலும் சென்று வரக்கூடிய ஒரு கோயில் அல்ல. கோயில் மற்றும் புனிதப் பயணம் தொடர்புடைய பல்வேறு சடங்குகள் உள்ளன, பக்தர்கள் அவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டும் மற்றும் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் அவர்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். இவற்றில் பின்வருபவை உள்ளடங்கும்:
மண்டல விரதமானது மாலையிடல் சடங்கிலிருந்து தொடங்குகின்றது. இது கழுத்தில் மாலை (மணிகளின் சங்கிலி) அணிவதைக் குறிக்கின்றது, இது கடுமையான விரதம் மேற்கொள்வதற்கான விருப்பத்தின் அடையாளம் ஆகும். இந்த மாலை பெரும்பாலும் சுவாமி ஐயப்பன் படம் போட்ட சிறு பேழையைக் கொண்டிருக்கும். கடுமையான விரதம் தொடங்கும் காலம் மாலையிடல் சடங்கிலிருந்து தொடங்குகின்றது. மாலை பெரும்பாலும் ஒரு கோயில் அர்ச்சகரிடம் இருந்து அல்லது குருசாமியிடம் (சபரிமலைக்கு முறை 18 புனிதப் பயணம் சென்றவர்) பெறப்படுகின்றது. புனிதப் பயணம் முடிந்தவுடன் மாலை கழற்றப்படுகின்றது.
மண்டல விரதம் என்பது புனிதப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் 41 நாள்கள் அனுஷ்டிக்க வேண்டிய கடுமையான நோன்பு ஆகும். இந்தக் காலத்தில், பக்தர்கள் உலக இன்பங்களில் இருந்து விலகி எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும், ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் மற்றும் தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆரோக்கியமான நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். நாள் முழுவதும் இறைவனுக்குப் பிரார்த்தனை செய்யப்படுகின்றது, பக்தர்கள் கருப்பு உடை அணிந்து உலக நாட்டத்திலிருந்து விலகி இருக்கின்றனர். இந்தக் காலத்தின்போது முடி வெட்டுதல், சவரம் செய்தல் மற்றும் நகம் வெட்டுதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
இருமுடிக்கெட்டு தயாரித்தல் என்பது சபரிமலை புனிதப் பயணம் தொடர்புடைய முக்கியச் சடங்குகளில் ஒன்றாகும். இருமுடிக்கெட்டு என்பது இரண்டு அறைகளைக் கொண்ட ஒரு சிறு பை ஆகும், இதில் ஒரு அறையில் சுவாமிக்கு அளிக்கும் படையல் பொருள்களும் மற்றொரு அறையில் பக்தர்களின் சொந்த உடைமைகளும் இருக்கும். இருமுடிக்கெட்டு தயாரிக்கும் சடங்கு கெட்டுநிரக்கல் எனப்படுகின்றது. இது குருசுவாமியின் வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படுகின்றது. சடங்கின் ஒரு பகுதியாக, தேங்காயில் உள்ள நீர் முழுவதையும் வெளியேற்றிய பிறகு அதற்குள் நெய் ஊற்றி நிரப்பப்படுகின்றது. இது பூலோக இன்பங்களை வெளியேற்றிவிட்டு ஆன்மீக எண்ணங்களால் நிரப்பப்படுவதைக் குறிக்கின்றது. இருமுடிக்கெட்டு தயாரிக்கப்பட்டு பக்தர்கள் சபரிமலை அடையும் வரை அதைச் சுமந்து செல்கின்றனர். இருமுடிக்கெட்டு இல்லாத எந்தப் பக்தரும் சன்னதிக்குச் செல்லும் 18 படிகள் ஏற அனுமதிக்கப்படுவதில்லை
எருமேலி பேட்டை துள்ளல் என்பது சபரிமலை புனிதப் பயணத்தில் அனுஷ்டிக்கப்படும் மிக முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும். சம்பிரதாயப்படி, பேட்டை துள்ளல் தனு மாதத்தின் [டிசம்பர்-ஜனவரி] முதல் நாளில் தொடங்கி அதே மாதத்தின் கடைசி நாளன்று முடிகின்றது. பேட்டை துள்ளல் என்பது ஒரு நடனம் ஆகும், இதில் நடனமாடுபவர்கள் தங்கள் உடல் முழுவதும் சந்தனத் தூளையும் சாம்பலையும் பூசிக்கொள்கின்றனர், ஆரஞ்சு பெர்ரி (பூமிப்பழம்) மரத்தின் இலைகளை அணிகிறார்கள், இலையால் ஆன கிரீடத்தை அணிகின்றனர், அம்புகளை ஏந்திக்கொள்கின்றனர் மற்றும் ஒரு குச்சியிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் காய்கறி மூட்டையைத் தோளில் சுமந்து செல்கின்றனர். சன்னிதானத்திற்குச் செல்வதற்கு முன் அம்பலப்புழை குழுவைச் சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் வாவர் மசூதிக்குச் செல்கின்றனர். ஆலங்காடு குழுவினர் சடங்கின் இந்தப் பகுதியில் கலந்துகொள்வதில்லை. கலைஞர்கள் சபரிமலைக்குச் செல்லும்போது வாரரும் அவர்களுடன் செல்கின்றார் என்பது ஐதீகம்.
திருவாபரணம் என்பது சுவாமி ஐயப்பன் சிலையை அலங்கரிக்கும் தங்கத்தால் செய்யப்பட்ட புனித ஆபரணங்களைக் குறிக்கின்றது. தனது தெய்வீக மகனுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக அவை பந்தள மன்னரால் செய்யப்பட்டன என்பது பிரபலமான நம்பிக்கை ஆகும். மகரவிளக்கு திருவிழா நாளன்று மாலையில் தீபாராதனை [தீபங்கள் ஏற்றி தெய்வத்தை வழிபடுதல்] காண்பிப்பதற்கு முன் அவை சிலை மீது அணிவிக்கப்படுகின்றன. அவை மூன்று பேழைகளில் கருவறைக்குக் கொண்டுவரப்படுகின்றன. முக்கியப் பேழை கடவுளின் நகைகளைக் கொண்டுள்ளது. மகரம் மாதத்தின் [ஜனவரி-பிப்ரவரி] ஐந்தாம் நாளன்று, கலபாபிஷேகம் [சந்தனக் கூழ் மற்றும் பிற நறுமணப் பொருள்களின் கலவையான கலபம் கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தல்] செய்யப்படுகின்றது. இரண்டாவது பேழை கலபத்தை வைத்திருக்கப் பயன்படுத்தப்படும் தங்கப் பானைகளைக் கொண்டுள்ளது. மூன்றாவது பேழை கொடியாகிய திடம்பு [தங்கத் தகட்டில் பொறிக்கப்பட்ட கடவுளின் உருவம் வழக்கமாக யானையின் மேல் வைக்கப்பட்டு கருவறைக்கு எடுத்து வரப்படுகின்றது] மற்றும் யானையின் அலங்காரத் தலைக்கவசத்தைக் கொண்டுள்ளது. இந்தப் பேழைகள் பந்தளம் மன்னருக்குச் சொந்தமான அரண்மனையின் சேமக் காப்பறையில் வைக்கப்படுகின்றன. அரச ஆபரணங்கள் சபரிமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு முன், புனிதப் பயணிகள் அவற்றைப் பார்ப்பதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர்.
இது மகரவிளக்குத் திருவிழா நாளன்று பக்தர்கள் உடன் வர கோயில் அதிகாரிகள் புனித ஆபரணங்களைச் சன்னதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் சடங்கு ஆகும். சுமார் 83 கிமீ தூரம் கொண்ட இந்தப் பயணம் மூன்று நாள்கள் நீடிக்கின்றது. இந்த ஊர்வலம் உரத்த சமயக் கோஷங்களுடன் பந்தளம் வலியகோயிக்கல் கோயிலில் இருந்து தொடங்குகின்றன. பேழைகள் மூடுபல்லக்கில் வைத்து எடுத்துவரப்படுகின்றன, அரச குடும்பத்தின் பிரதிநிதி ஒருவரும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்கிறார். கடந்த 68 வருடங்களாக, குளத்துங்கல் கங்காதரன் பிள்ளை சுவாமி அரச ஆபரணங்களைத் தனது தலையில் சுமந்து வருகிறார். வழியெங்கும் உள்ள பல கோயில்களில் இந்த ஊர்வலத்திற்குப் பெரும் வரவேற்பு அளிக்கப்படுகின்றது. மகரவிளக்குத் திருவிழா முடிந்து, கலபாபிஷேகம் செய்யப்பட்டு படையல்கள் அளிக்கப்பட்ட பிறகு இது திரும்ப எடுத்துவரப்படுகின்றது.
மகரவிளக்கு நாளன்று, அதாவது மகரம் மாதத்தின் [ஜனவரி-பிப்ரவரி] முதல் நாளன்று சுவாமி ஐயப்பன் சிலைக்குத் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன. ஆனால் 1973-இல் திருவிதாங்கூர் மகாராஜா சித்திரைத் திருநாள் பலராம வர்மனால் பரிசளிக்கப்பட்ட – 420 சவரன் கொண்ட தங்க அங்கி (தங்க உடை) மண்டல பூஜையின்போது (இது, விருச்சிகம் மாதத்தின் [நவம்பர்-டிசம்பர்] முதல் நாளில் தொடங்கி தனு மாதத்தின் [டிசம்பர்-ஜனவரி] பதினொன்றாம் நாள் முடிகின்ற 41-நாள் விரதத்தின் முடிவில் கோயிலில் நடக்கும் முக்கியமான திருவிழா ஆகும்) சுவாமியின் சிலைக்கு அணிவிக்கப்படுகின்றது. தங்க அங்கியானது ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து சமய ஆரவாரங்களுடன் சபரிமலைக்கு எடுத்துவரப்படுகின்றது. மண்டல பூஜை நிறைவுற்ற பிறகு, அது திருப்பி எடுத்துச் செல்லப்பட்டு ஆரன்முளா கோயிலின் சேமக் காப்பறையில் வைக்கப்படுகின்றது.