English
தமிழ்
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
விவசாயத்தின் செழுமை மற்றும் வளத்தின் சின்னமாக விளங்கும் நிரப்புத்தரி விழாவை மலையாளிகள் தங்கள் வீடுகளில் சிறு நெல்மணிக் கட்டுகளைத் தொங்கவிடுவதன் மூலம் கொண்டாடுகின்றனர். இந்தச் சடங்கும் சபரிமலையின் முக்கியமான சடங்குகளில் ஒன்றாகும். பாரம்பரியமாக, திருவிதாங்கூர் அரச குடும்பமும் நிரப்புத்தரி தினத்தைக் கொண்டாடுகின்றது.
நிரப்புத்தரிக்கு முந்தைய நாள், சபரிமலை கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கப்படுகின்றன. காலையில் நெல்மணிக் கட்டுகள் பதினெட்டாம்படியில் (18 படிகள்) தந்திரியால் பெறப்படுகின்றன. அதன் பின் நெல்மணிக் கட்டுகள் கிழக்கு மண்டபத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன. அங்கு வழிபாடு முடிந்தவுடன், நெல்மணிக் கட்டு சுவாமி ஐயப்பனுக்குப் படைப்பதற்காக கருவறைக்குள் எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்தப் புதிய அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட பாயசமும் ஐயப்பனுக்குப் படையல் இடப்படுகின்றது.
பூஜைக்குப் பிறகு, சிறிய நெல்மணிக் கட்டுகள் கருவறையின் முன்புறம் கட்டப்படுகின்றன. எஞ்சியுள்ளவை தந்திரி (முதன்மை அர்ச்சகர்) மற்றும் மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) ஆகியோரால் பக்தர்களுக்குப் பிரசாதமாக (அபிஷேகம் செய்யப்பட்ட படையல்) வழங்கப்படுகின்றன. இப்போது, சன்னிதானத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் இறைவனுக்கு முதல் படையலாக அளிக்கப்படுகின்றது.
ஆறன்முளா, பாலக்காடு, அச்சன்கோவில் மற்றும் செட்டிக்குளங்கரை ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நெல்மணிகள் வழக்கமாக நிரப்புத்தரிக்காக சபரிமலைக்கு வழங்கப்படுகின்றன. கூடுதலாக, தமிழ்நாட்டில் இருந்தும் நெல் கொண்டுவரப்படுகின்றது. இராஜபாளையத்தில் இருந்து பக்தர்கள் ரத ஊர்வலமாக சன்னிதானத்திற்கு நெல் எடுத்து வருகின்றனர்.