English
தமிழ்
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
சபரிமலையின் சிறப்புப் பூஜைகள் பற்றித் தெரிந்துகொள்ளவும்
சுவாமி ஐயப்பனுக்குச் செய்யப்படும் மிக முக்கியமான மற்றும் மங்களகரமான சடங்குகளில் ஒன்று, விக்கிரகத்திற்கு நெய் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகின்ற ‘நெய்யாபிஷேகம்’ ஆகும். இந்தச் சடங்கு அதிகாலை 04:00 மணிக்குத் தொடங்கி மதியம் 01:00 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கும் வரை தொடர்கிறது.
‘நெய்யாபிஷேகம்’ முடிந்த பிறகு, பூசாரி அந்த நெய்யின் ஒரு பகுதியை தெய்வீகப் பிரசாதமாகத் திருப்பிக் கொடுக்கிறார். நெய் நிரப்பப்பட்ட தேங்காய்களைக் கொண்டுவராத பக்தர்கள் தேவஸ்வம் போர்டு வழங்கும் அபிஷேக நெய்யைப் பெற்றுக்கொள்ளலாம். மனித ஆன்மாவுக்கு நிகரானதாகக் கருதப்படும் இந்த நெய் சுவாமி ஐயப்பன் அல்லது பரமாத்மாவுடன் இணைவதாக நம்பப்படுகின்றது. நெய் நிரப்பப்படாத தேங்காய் உயிரற்ற உடலைக் குறிக்கின்றது, அதனால் அது கோயிலுக்கு முன்பாக உள்ள ஆழி எனப்படும் நெருப்புக் குழிக்குள் போடப்படுகின்றது.
சபரிமலையின் தனிச்சிறப்பான அம்சங்களில் ஒன்று ‘பதினெட்டாம்படி’ அல்லது 18 புனிதப் படிகள் ஆகும், அவை ஒவ்வொன்றும் தனக்கே உரித்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இந்தச் சடங்கு குறிப்பிட்ட நாள்களில் மாலை வேளைகளில் நிகழ்கிறது மற்றும் முதன்மை அர்ச்சகரான மேல்சாந்தியின் முன்னிலையில் தந்திரியால், அல்லது தலைமை அர்ச்சகரால் நடத்தப்படுகின்றது. படிகள் மலர்கள், பட்டுத் துணிகள் மற்றும் பாரம்பரிய விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒரு பயபக்தியான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு மணி நேரம் நீடிக்கும் இந்தச் சடங்கிற்குப் பிறகு, சபரிமலையின் மிகவும் புனிதமான மற்றும் மரியாதைக்குரிய சடங்குகளில் ஒன்று முடிவுற்றதைத் தெரிவிக்கும் விதமாக தந்திரி ’ஆரத்தி’ காட்டுகிறார்.
உதயாஸ்தமன பூஜை விடியற்காலை முதல் அந்திப் பொழுது வரை (நிர்மால்யம் முதல் அத்தாழ பூஜை வரை) நடத்தப்படுகின்றது. ’உதயாஸ்தமயம்’ என்பதன் பொருள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை என்பதாகும் (’உதயா’ என்பது சூரிய உதயத்தையும் ‘அஸ்தமயா’ என்பது சூரிய அஸ்தமனத்தையும் குறிக்கின்றது). இந்தப் பூஜைக்காக விரிவான ஏற்பாடுகள் தேவைப்படுவதால் இது குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே நடத்தப்படுகின்றது.
தாந்த்ரீக வேதம் மற்றும் ஆகம சாஸ்திரங்களின்படி, சஹஸ்ரகலசம் என்பது அனைத்து மக்களின் நலன்களுக்கான ஆசிகளைப் பெறுவதற்காக ஹரிஹரபுத்திரருக்கு (ஸ்ரீ தர்மசாஸ்தா) அளிக்கப்படும் படையல் ஆகும். இது, புனிதக் கலசத்தில் (புனிதப் பானை) தங்கம், வெள்ளி, தாமிரம் மற்றும் பிற விலையுயர்ந்த மற்றும் அரைமணிக்கற்கள், தூபங்கள், ஏழு பெருங்கடல்கள் மற்றும் புனித நதிகளின் நீர் ஆகியவற்றைக் கொண்டு நிரப்பி அனைத்துப் புனித ஆவிகளையும் வரவழைக்கின்ற பெருமதிப்பிற்குரிய முயற்சியாகும்.
உற்சவபலி மரபு பாணி இசைத்தலுடன் தொடங்குகின்றது. முதன்மைத் தெய்வத்தின் கூட்டாளிகளாக உள்ள பூதகணங்களைக் கவரும் விதமாகப் பாணி வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் உற்சவபலி அவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அடுத்து, நாலம்பலம் மற்றும் பலிக்கல்புரா ஆகியவற்றைச் சுற்றியுள்ள பூதகணங்களின் பலிக்கல் சமைத்த பச்சரிசி கொண்டு மூடப்பட்டிருக்கும் (உற்சவபலி தூவல்). முதன்மைத் தெய்வத்தின் திடம்பு கருவறையிலிருந்து அகற்றப்பட்டவுடன் சமைக்கப்பட்ட சாதத்தை சப்தமாதர்கள் மீது பக்தர்கள் தூவலாம். உற்சவபலி என்பது சுவாமி ஐயப்பன் கோயிலின் வருடாந்திரக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதி ஆகும்.
புஷ்பாபிஷேகம் என்பது சபரிமலையில் சுவாமி ஐயப்பன் மீது மலர் தூவி வழிபடும் சடங்கு ஆகும். புஷ்பாபிஷேகம் வழிபாட்டின்போது, மல்லிகை, துளசி, கிரிஸாந்தமம், தாமரை மற்றும் வில்வ இலைகள் உள்ளிட்ட பல்வேறு மலர்கள் மற்றும் இலைகள் சுவாமி ஐயப்பனின் சிலை மீது தூவப்படுகின்றன. சபரிமலையில் புஷ்பாபிஷேகத்தில் பங்கேற்க விருப்பமுள்ள பக்தர்கள், அதற்கான பங்கேற்புக் கட்டணம் செலுத்தி முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
அஷ்டாபிஷேகம் என்பது எட்டு பொருள்களை சுவாமி ஐயப்பனுக்குப் படைப்பதாகும். நெய், விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர் (ரோஸ் வாட்டர்) ஆகியவை சபரிமலையில் அஷ்டாபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகும்.
கலபாபிஷேகம் என்பது வழக்கமாக தெய்வத்தின் சைதன்யத்தை (பிரகாசம்) வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான சிறப்புப் பூஜை ஆகும். கலபாபிஷேகத்தின் ஒரு பகுதியாக, மேல்சாந்தியின் முன்னிலையில் நாலம்பலத்தில் தந்திரி கலபகலச பூஜையை மேற்கொள்கிறார்.
சுவாமி ஐயப்பனின் சிலைக்கு சந்தன அபிஷேகம் செய்து சடங்கை முடிவுக்குக் கொண்டுவரும் நிகழ்வாகிய கலபகலசாபிஷேகம், ஸ்ரீ கோவிலைச் சுற்றி கலபாபிஷேகத்திற்கான சந்தனக் குழம்பைக் கொண்டுள்ள தங்கக் கலசத்தை எடுத்துச் செல்லக்கூடிய ஊர்வலம் முடிந்த பிறகு தந்திரியால் உச்சிகால பூஜையின்போது மேற்கொள்ளப்படுகின்றது.
’அர்ச்சனை’ என்பது தெய்வீக நாமத்தை உச்சரித்து மரியாதை செய்யும் செயலைக் குறிக்கின்றது. ‘இலட்சம்’ என்பது 100,000 ஆகும். எனவே, ‘இலட்சார்ச்சனை’ என்பது மந்திர வடிவில் இறைவனின் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லும் நடைமுறையைக் குறிக்கின்றது. இதைத் தொடர்ந்து தந்திரி, தலைமை அர்ச்சகர் மற்றும் பிற அர்ச்சகர்களின் உதவியுடன் சன்னிதானத்தில் இலட்சார்ச்சனையை நடத்துகிறார். இலட்சார்ச்சனையின் பயன்படுத்தப்படும் “பிரம்மக்கலசம்” அதன் பின் சம்பிரதாயப்படி உச்சிகால பூஜைக்கு முன்னதாக “அபிஷேகத்திற்காகக்” கருவறைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றது.