அது பாரம்பரியப் பாதையாக இல்லாமலிருக்கலாம், ஆனால் அது உண்மையில் சன்னிதானத்திற்குச் செல்வதற்கான உங்கள் பயணத்திற்கு உற்சாகமான பாதையாக இருக்கும். வண்டிப்பெரியார் என்பது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அழகான சிற்றூர் ஆகும். கோட்டயம்-குமுளி சாலையில் அமைந்துள்ள முக்கிய இடங்களில் ஒன்றாகிய வண்டிப்பெரியார், சபரிமலைப் பயணத்தின்போது நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய மிக மகிழ்ச்சியான வழிகளில் ஒன்றாகும்.

வண்டிப்பெரியாரில் இருந்து சபரிமலைக்கு செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. இவற்றில் புனிதப் பயணிகள் முக்கியமாக கோழிக்கானம், புல்லுமேடு, உப்புப்பாறை மற்றும் உரல்குழிதீர்த்தம் வழியாகச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர். மற்றொரு பாதை வண்டிப்பாறையில் இருந்து மவுண்ட் எஸ்டேட் செல்லக்கூடியதாகும், அங்கிருந்து பக்தர்கள் சன்னிதானத்திற்கு நடந்து செல்ல வேண்டும்.

வண்டிப்பெரியாரில் இருந்து உப்புப்பாறை செல்ல புனிதப் பயணிகள் கேரளா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் (KSRTC) பேருந்துகளில் செல்லலாம் அல்லது தனியார் ஜீப் சேவைகளையும் பயன்படுத்தலாம். அதன் பின் பக்தர்கள் அங்கிருந்து பாண்டித்தாவளம் வழியாகச் சபரிமலை சென்றடைய வேண்டும். பாண்டித்தாவளம் என்பது சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் முக்கிய இளைப்பாறும் முகாம் ஆகும். பின்னர் அவர்கள் வள்ளக்கடவு மற்றும் கோழிக்கானம் வழியாகப் புல்லுமேடு சென்றடைந்து, அங்கிருந்து சன்னிதானத்திற்குச் செல்லலாம்.

சபரிமலைக்குச் செல்லும் வண்டிப்பெரியார் பாதை பிற மாநிலங்களில் இருந்து புனிதப் பயணிகள் ஐயப்பன் கோயிலை அடைவதற்கு வசதியான பாதையாக இருப்பதால் பல ஆண்டுகளாக அது மிகவும் பிரபலமாக உள்ளது.

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top