சுவாமி ஐயப்பன் வாவர் சுவாமியுடன் கொண்டிருந்த நட்பு பற்றிய வரலாற்றுக் கதை சபரிமலை குறிப்பிடுகின்ற மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக விளங்குகின்றது. சபரிமலைக்குச் செல்ல பாரம்பரிய வழியைத் தேர்ந்தெடுக்கும் புனிதப் பயணிகள் எருமேலிக்குச் சென்று வாவர் மசூதியை வழிபட்ட பின்னரே மலையேறுகின்றனர். புராணத்தின்படி, ஒரு முஸ்லிமாகிய வாவர் சுவாமி ஐயப்பனின் விசுவாசமுள்ள நண்பர் ஆவார். ஐயப்பன் பாடல்களில், வாவர் ஐயப்பனின் நெருங்கிய தோழராக ஆவதற்கு முன் பல முறை அவரிடம் சண்டையிட்டுத் தோல்வியுற்ற வீரனாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யானை மீது வந்த ஐயப்பன் குதிரையில் வந்த வாவரை எப்படி எதிர்கொண்டார், எப்படி கடைசியில் அவரது தொழிலில் உதவி செய்து தங்கள் நட்பை பலப்படுத்தினார் என்பதைப் பற்றி இந்தப் பாடல்கள் விவரிக்கின்றன. வாவர் சாஸ்தாம் பாட்டிலும் பூதநாத உபாக்கியானத்திலும் குறிப்பிடப்படுகின்றார். கடுத்த சுவாமியைப் போலவே வாவரும் பின்னாளில் ஐயப்பனின் தீவிர பக்தராக மாறினார் என நம்பப்படுகின்றது. 

வாவருக்காக எரிமேலியில் ஒரு மசூதி கட்டப்பட்டது. ஐயப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல் ஊர்வலம் எருமேலி கொச்சம்பலத்திலிருந்து தொடங்கி வாவர் மசூதிக்குச் செல்கின்றது, அங்கு வாவருக்கு மரியாதை செலுத்திய பின் சபரிமலை வனப் பாதைக்குள் நுழைந்து கரிமலையைக் கடக்கின்றது.

சபரிமலையில் வாவருக்கென ஒரு சிறப்பு சமயத் தலமும் உள்ளது. வாவரின் சன்னதியின் அர்ச்சகர் வாவர் சுவாமி குடும்பத்தின் வழித்தோன்றல் என நம்பப்படுகின்றது, இது பல நூற்றாண்டுகளாக சபரிமலையில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழ்கின்றது.    

எங்களின் செய்தி மடலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Icon for Go To Top